தாத்தா. தமிழில் உள்ள நாயனார் என்னும் சிவ அடியார்கள் கதைகளைச் சொல்லுங்கள் தாத்தா.
"டேய் விக்கிபீடியா போய்ப் பார். அதிலே இருக்கிறது".
தாத்தா நேரம் இல்லை. நேரம் கிடைத்தாலும் அப்போது மின்சாரம் இருக்காது. மின்சாரம் இருந்தாலும் சிக்னல் கிடைக்காது. நீங்கள் கூறுங்கள் தாத்தா.
சரி நானே கூறுகிறேன். நான் விக்கிபீடியாவில் தான் படித்தேன். அதை அப்படியே சொல்கிறேன். கேள்.
சோழநாட்டின் வளம் மிகுந்ததோர் துறைமுகப்பட்டினம் நாகப்பட்டினம். அந்நாகபட்டினத்து நுழைபாடியிலே பரதவர் அதாவது மீனவர்கள் வாழ்ந்தனர். மீன் பிடிப்பது அவர்களுக்குத் தொழில். அப்பரதவர்களுக்குத் தலைவரான ஒரு பெரும் நல்லவர் இருந்தார். அவர் பெயர் அதிபத்தர். இவர் தான் நமது இன்றைய கதாநாயகர். அவர் ஒரு பெரிய சிவ பக்தர். நாள்தோறும் பிடிபடும் மீன்களுள் தலையாய ஒரு மீனை ‘இது நட்டமாடிய நம்பர்க்கு’ என்று கூறி அதாவது சிவபெருமானுக்கு என்று கூறி மீண்டும் கடலிலேயே விட்டு விடுவது அவருடைய வழக்கம். ஒரு நாளில் ஒரு மீனே பிடிபடினும் அம்மீனைச் சிவனடிக்கென்று விடுவதை அவர் விடாது செய்து வந்தார். இப்படி அநேக நாள்கள் ஒரு மீனே பிடிபட அவரை வறுமை பீடித்தது. சுற்றத்தவர் உண்ண உணவு இன்றி வருந்தினர். ஆனால் இவர் வருத்தப்படவில்லை. வருந்தாது தம் பணியினை மகிழ்வோடு செய்து வந்தார். இப்படியே தொடர்ந்து நாளெல்லாம் நிகழ அவரும் பசியால் தளர்ந்தார். ஆயினும் தமது தலைமீன் அளிக்கும் சீலத்தில் அதாவது கிடைத்த மீனில் முதல் மீனை இறைவனுக்காகக் கடலில் எரியும் வழக்கத்தை செய்வதில் தவறாதிருந்தார். பார்த்தார் சிவன். இவரின் பக்தியை உலகறியச் செய்ய வேண்டும் என்று எண்ணினார். "என்ன தாத்தா சோதனைய?" என்றான் ஒம்சாய் . ஆமாம்டா. சோதனை தான். தங்கம் கட்டியாக இருந்தால் யாருக்கு என்ன இலாபம்?நகையாக அணிகலனாக மாறினால் தானே நன்றாக இருக்கும். எனவே இத்தகைய அதிபத்தரின் தலையாய அன்பெனும் ஆரமுதம் அருந்தத் திருவுளம் பற்றினர் ஆலமுண்ட பெருமான்.
ஒரு நாள் ஒரு மீனுக்குப் பதிலாக மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பொன்று பிடிபட்டது. அது மணிகள் பதித்த பொன்மீன். "என்ன தங்கத்திலே மீனா?" ஆச்சரியத்துடன் கண்ணை விரித்தாள் ஐசு. அம்மீன் கடலில் உதிக்கும் பகலவன் போல் கரையில் இழுத்த வலையிலே ஒளிர்ந்தது. வலைஞர் அதிசயமிகுதியோடு அற்புதமான மீன் ஒன்று பிடித்தோம்” என்று அதிபத்தரிடம் கூறினார். அதிபத்தர் உலகம் யாவும் பெறும் என்று மதிக்கத்தக்க அம்மீனைப் பார்த்து மகிழ்ந்தார்.முதலில் பிடித்தது இந்த மீன் தான். பொன்மீன் ஆயினும் அவருக்கு அர்பணிப்பணிப்பது தானே முறை. “இப்பொன்மீன் என்னை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க” என்று அலைமீது விட்டார். பொருளை முதலெனக் கொள்ளும் இவ்வுலகிலே பொருட்பற்றை முற்றும் துறந்த அதிபத்தரின் முன் இறைவன் ஆகாயத்திலே தோன்றினார். அதிபத்தர் சிரங்குவித்து வணங்கி நின்றார். அவரைச் சிவலோகத்திற் சிறப்புற்றிருக்கும் வண்ணம் தலையளித்தாண்டார் இறைவன் சிவபெருமான்..
புரிகிறதா. இறைவனுக்குத் தருகிறோம் எனறு கூறினால் எவ்வளவு மதிப்பு மிக்கதாயினும் நாம் கொடுத்துவிட வேண்டும். அப்போது தான் நம் வாழ்வு சிறக்கும்.
No comments:
Post a Comment