Thursday, September 30, 2010

EKALAIVAN STORY

ரு குருகுலம்; மாணாக்கர் பலர் அங்குத் தங்கி இருந்தனர்; கல்வி பயின்றனர்.
அவர்களுக்குக் கற்பித்த குரு மிகக் கற்றவர்; மாணாக்கர்கள் சிறந்த கல்வி பெறவேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். பல கலைகளையும் முறையாகக் கற்பித்தார்.
புலவர் ஒருவர் மகனும் குருகுலத்தில் கல்வி கற்றான்.
இயல்பிலேயே கூர்த்த அறிவு கொண்டவன் அவன்; குரு கற்பிப்பனவற்றைக் கவனமாகக் கற்றான். தலைமாணாக்கனாக விளங்கினான்.
காலம் ஓடியது; பல ஆண்டுகள் கழிந்தன.
அவன் கல்வி நிறைவு எய்தியது.
அவன் தன் இல்லம் திரும்பும் நாள் வந்தது.
குருவைப் பணிந்து வணங்கினான்; தன் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டான்.
“குருவே, அனைத்துக் கலைகளையும் எனக்குக் கற்பித்து அருளினீர்கள்; உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்; என் உயிருள்ள மட்டும் உங்களை நான் மறவேன். இன்று நான் இல்லம் செல்கிறேன்; இன்னும் எனக்குக் கூறவேண்டுவது ஏதேனும் இருந்தால் அருள்கூர்ந்து கூறி அருளவேண்டும்!” என்று பணிவாக வேண்டினான்.
“கற்பிக்க வேண்டுவன அனைத்தையும் உனக்குக் கற்பித்துவிட்டேன்; இனி உனக்குக் கற்பிக்க ஏதும் இல்லை. மகிழ்ச்சியாக இல்லம் செல்; உலக வாழ்க்கையைத் தொடங்கு; உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் சமுதாயத்துக்கும் பயனுள்ள நல்ல மனிதனாக வாழத் திருவருள் உனக்குத் துணைநிற்குமாக!” என்று உள்ள நிறைவோடு அவனை வாழ்த்தினார் குரு.
மீண்டும் வணங்கி எழுந்தான் மாணாக்கன்.
"இனிச் சொல்லவேண்டுவது ஒன்றே ஒன்றுதான் உண்டு; சொல்கிறேன், கேட்டுக் கொள். வாழ்வில் என்றும் இதனைக் கடைப்பிடி. எக்காலத்திலும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் முட்டாள்களோடு விவாதம் செய்யாதே!” என்றார் குரு.
“என்ன காரணம் என்று கூறி அருளவேண்டும்!” என்று வினாவினான் மாணாக்கன்.
“காரணமா? எளிய காரணம்தான். முட்டாள் ஒருவனோடு நீ விவாதம் செய்வாயானால் உங்கள் இருவருள் யார் முட்டாள் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமல் போய்விடும்!” என்று விடையிறுத்தார் குரு

தாத்தா இந்த கதையில் இருந்து நான் நல்ல விடயங்களைத் தெரிந்து கொண்டேன்.  இதை எங்கே படித்தீர்கள் தாத்தா?
இது வளமை என்னும் வலைத் தளத்தில் வந்த அருமையான கதை.  எனவே தான் உங்களுக்கும் சொன்னேன்.
தாத்தா ஏகலைவன் கதை சொல்லுங்க தாத்தா.
ஏகலைவன் ஒரு வேடன் மகன்.  வீரம் செறிந்தவன்.  தோள் பலம் உடையவன்.  துரோணரிடம் வில் விதை கற்க நினைத்தான்.  வசதி வாய்ப்பு இல்லை.  எனவே மனதில் அவரை குருவாக நினைத்து கலைகள் பல பயின்றான்.  வீரத்தின் விளைநிலமாக வளர்ந்தான்.  அர்ஜுனனுக்கு நிகராக - கர்ணனைப் போல வீரத்தில் - வில்வித்தையில் சிறது விளங்கினான்.  ரொம்ப பேர் வில் என்றால் அருசுனனைத் தான் சொல்கிறார்கள்.  தவறு. விதுரன் - கர்ணன் - ஏகலைவன் போன்றோரும் உண்டு.  துரோணருக்கு இவன் வித்தை வியப்பைத் தருகிறது.  அவனிடமே போய் யார் உன் குரு என்கிறார்.  அவன் துரோணர் தான் என் குரு என்கிறான்.  வியக்கிறார் துரோணர்.  அர்ஜுனன் தோற்றுவிடக் கூடாதே என்பதற்காக அவனது கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்கிறார்.  அவனும் குரு காணிக்கையை உடனே சிறுது யோசியாமல் தருகிறான்.  எனவே தான் சரித்திரத்தில் இடம் பெற்று விட்டான்.  சரியா?

Monday, September 27, 2010

VINAAYAGAR AGAVAL - POEM ON GANAPATHI

விநாயகர் அகவலை நாம் பெரும்பாலும் படித்திருப்போம்.   "தாத்தா - எனக்குத் தெரியும் சீதக் களபச் செந்தாமரை என்று துவங்குமே அந்தப் பாடல் தானே.   நான் அதை பாடலாகக் கேட்டிருக்கிறேன்" என்றான் சூரியா.  சரி யார் அதைப் பாடியது தெரியுமா?  "தாத்தா சீர்காழி கோவிந்தராஜன்" என்றான் சூரியா.   இல்லை.  அந்தப் பாடலை இயற்றியவர் ஒளவையார்.  அது இயற்றப்பட்ட காரணம் - நேரம் பற்றி எல்லாம் இன்றைக்கு ஒரு வலைத்தளத்தில் படித்தேன்.  நன்றாக இருந்தது.   உங்களுக்குச் சொல்கிறேன்.  விநாயகரே அவ்வையார் முன் நேரில் தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, கேட்டு தலையாட்டிய பாடல் இது.
சுந்தரர் கைலாயதிற்குப் புறப்பட வேண்டிய நேரம் வந்தது.  வானத்தில் இருந்து ஐராவதம் என்னும் யானை வந்து அவரைச் சுமந்து சென்றது.  அப்போது சுந்தரர் இருந்தது சேர மன்னனுடன்.  சேர மன்னன் உடனே ஐந்தெழுத்தை தனது குதிரையின் காதில் ஓதினான்.  குதிரையும் பறந்தது.  சேர மன்னன் குதிரை மேல் சென்றான்.  அப்போது அவர்கள் ஒளவையாரை வானத்தில் இருந்து பார்த்தார்கள்.  நீங்களும் வருகிறீர்களா என்று கேட்டார்கள். "இல்லை நான் வினாயகருக்ககப் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறேன்."  என்று பதில் கூறிவிட்டார்கள் ஒளவையார்.  பாட்டு முடிந்தவுடன் விநாயகர் "நீங்கள் கைலாயம் போக விருப்பமா?" என்று கேட்டார்.  "தங்கள் தந்தையைப் பார்க்க யாருக்குத் தான் விருப்பன் இருக்காது?" என்றார் ஒளவையார்.  உடனே அடுத்த கணமே அவர்கள் கைலாயம் அடைந்தார்கள்.  சேர மன்னனும் சுந்தரரும் கைலாயம் வரும்போது அவ்வையார் அங்கே இருந்ததைக் கண்டார்கள்.  மலைத்துப் போனார்கள்.  கணபதி நினைத்தால் எதுவும் நடக்கும்.   நாமும் கணபதியைப் போற்றுவோமா? 

கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!
ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!
கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!
உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!
வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!
 "தாத்தா விநாயகர் அகவலை நான் படிக்க வேண்டும் தாத்தா. என்னிடம் இல்லை " என்றான் சாய் அர்ஜுன்.  "இந்தப்பா இதை வாங்கிப் படி" என்றார் தாத்தா.  நீங்களும் படித்து மகிழுங்கள்.
 
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
   
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
   
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
   
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
   
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

   
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
   
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
   
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
   
நான்ற வாயும் நாலிரு புயமும்
   
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

   
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
   
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
   
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
   
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
   
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

   
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
   
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
   
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
   
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
   
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

   
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
   
திருவடி வைத்துத் திறமிது பொருளென
   
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
   
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
   
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

   
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
   
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
   
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
   
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
   
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

   
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
   
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
   
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
   
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
   
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

   
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
   
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
   
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
   
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
   
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

   
குண்டலி யதனிற் கூடிய அசபை
   
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
   
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
   
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
   
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

   
குமுத சகாயன் குணத்தையும் கூறி
   
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
   
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
   
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
   
எண் முகமாக இனிதெனக் கருளிப்

   
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
   
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
   
கருத்தினில் கபால வாயில் காட்டி
   
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
   
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

   
முன்னை வினையின் முதலைக் களைந்து
   
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
   
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
   
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
   
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

   
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
   
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
   
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
   
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
   
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

   
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
   
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
   
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
   
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
   
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

   
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
   
வித்தக விநாயக விரைகழல் சரணே!
"தாத்தா நாமும் ஐந்தெழுத்தை ஓதினால் இப்படி வானில் பறக்க முடியுமா?" என்றான் சூரியா.  "முயற்சி திருவினை ஆக்கும்" என்றார் தாத்தா.   அப்படியும் ஒரு காலம் வரும் சூரியா.

Sunday, September 26, 2010

PARASURAAMAR PIRANTHA KATHAI

இராமர் பிறந்து விட்டார்.  சீதை பிறந்து விட்டால்.  திருமணம் நடந்தால் பரசுராமர் வந்து மோத வேண்டுமே?  அவர் எங்கே பிறந்தார்?   அவர் கதை என்ன கேளுங்கள் குழந்தைகளே.
பகீரதன் பல முயற்சி செய்து தங்கள் முன்னோர்களைக் கரையேற்ற கங்கையை இந்த உலகத்திற்குக் கொண்டு வருகிறான்.  ஆனால் அந்த கங்கையை  புரூரவஸ் என்னும் முனிவர் மிக எழிதாக தான் காதில் அடித்துக் கொள்கிறார்.  பின்னர் அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி நிலைமையை விளக்கிய பிறகே கங்கையை வெளியே விடுகிறார் அந்த முனிவர்.  அதனால் தான் கங்கைக்கு ஜானவி என்றும் அழைப்பர்.  விசுவாமித்திர முனிவரின் தந்தையான கதி இவர் வழி வந்தவரே.  இதெல்லாம் பாகவதத்தில் பதினைந்து மற்றும் பதினாறாவது பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது.  கதி என்ற அந்த முனிவருக்கு சத்யவதி என்று ஒரு பெண்.   ஒரு அந்தணன் பெயர் Rcheeka இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.  கதியோ ஆயிரம் குதிரை வேண்டும் அதுவும் காதுகள் கருப்பாக இருக்க வேண்டும் எனறு நிபந்தனை விதித்தார்.  அந்த காலத்தில் பெண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்றால் ஆண் மகன் தான் செல்வதைத் தர வேண்டும்.  அந்த அந்தணரும் வருண பகவானை வேண்டி அதைப் பெற்றுக் கொண்டு வந்து கொடுத்தார்.  சத்யவதியைத் திருமணம் செய்து கொண்டார்.
கணவனிடம்  ஒரு நல்ல குழந்தை வேண்டி ஆசிர்வாதம் கேட்டாள் சத்யவதி.  அவர் சத்யவதிக்கும் அவள் தாய்க்கும் தனித்தனியாக சாறுகள் கொடுத்தார்.  முனிவருக்குத் தெரியாமல் அவர்கள் அதை மாற்றிக் கொண்டனர்.  அப்போது தான் முனிவர் சொல்ல விபரீதம் புரிந்தது.  அவள் புரிந்த தவறால் சத்திரியர்களைக் கொல்லும் ஒரு வீர மகன் பிறப்பான் என்பது தெரிந்தது.  தனது மகன் அப்படி இருக்கக்கூடாது எனவும் பேரன் அப்படி இருக்கட்டும் என்றும் ஒரு திருத்தும் வேண்டினால் சத்யவதி. அதன் பிரகாரம் பிறந்தவர் தான் ஜமதக்னி முனிவர்.   ஜமதக்னி முனிவரின் மனைவி தான் ரேணுகா தேவி.  இவர்களுக்குப் பிறந்தவரே பரசுராமர்.  சத்யவதியின் தாயாருக்குப் பிறந்தவர் தான் விஸ்வாமித்திரர் - பிரம்மரிஷி.   பரசுராமரின் தந்தையான ஜமதக்னியை கார்த்தவீரியன் என்னும் பெருவீர மன்னன் கொன்று விடுகிறான்.  அதனால் தான் மன்னர் பரம்பரையை வேரறுக்க புறப்படுகிறார் பரசுராமர்.  21 மன்னர்களின் தலையை அறுத்த பிறகு தன் தந்தையின் தலையை உடலுடன் சேர்த்து உயிர்ப்பிக்கிறார் பரசுராமர்.  அதுவரை ரேணுகா தேவி பொருது இருக்கிறாள்.
பரசுராமர் தந்தையின் சாபத்திலிருந்து ஒருமுறை தாயாரையும் முதலில் வெட்டி வீழ்த்தி விட்டு பின் உயிர்ப்பித்து உள்ளார்.  எனவே தான் மேற்குக் கடற்கரை மக்கள் பரசுராமரையும் அவரது தாயரையும் வணங்குகிறார்கள்.  ஏன் என்றால் மேற்கு கடற்கரைப் பகுதியான மலையாளம் மற்றும் கன்னடத்துப் பகுதிகள் கடலிலிருந்து மீட்கப்பட்ட பகுதிகள்.  ஆழத்தில் இருந்து வந்த மலைப்பகுதிகள்.  எனவே தான் அந்த பகுதிகளில் - கேரளம் மற்றும் கர்நாடகாவில் மலைகள் அதிகம் உள்ளன.  அதுவும் கடற்கரையை ஒட்டி.   கேரளத்தை பரசுராம சேத்திரம் என்றும் சொல்லுகிறார்கள்.  பெருமைப்படுகிறார்கள்.  இறைவனால் உருவாக்கப்பட்ட நாடு என்று சொல்கிறார்கள்.  பாண்டிய நாட்டில் இறைவனே ஆட்சி புரிந்திருக்கிறான்.  பிரம்படி பட்டிருக்கிறான்.  வலைவீசித் திருவிளையாடலை நடத்தி இருக்கிறான்.  தருமியிடம் கடிதம் கொடுத்து சேர மன்னனிடம் செல்வம் பெறும்படி கூறி உள்ளார்.  தமிழ் வளர்த்த சங்கத்தில் வந்து வாதிட்டு உள்ளார்.  நாம் இப்படிப் பெருமை பேசுவது இல்லையே.  கடவுள் இல்லை கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்பவனைத் தலைவனாக கருதிப் பெருமைப் படுகிறோமே.  சரி தானா குழந்தைகளே.?  இறைவனுடன் கையேந்துங்கள்.  அவன் இல்லை என்று சொல்வது இல்லை.
தேடிச் சோறு நிதந்தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக்
கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக்
கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை
மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
இல்லை.  இறைவனின் பெருமையைப் பேசுவேன்.  முன்னோர் பெருமையைப் பேசுவேன்.  முன்னோர் வழிபாடு பற்றி சொல்வேன்.  வந்தால் மாலை.  போனால் மயிறு.  இது பழமொழி மட்டும் அல்ல.  முயற்சியில் தளராமல் இருக்க ஒரு தாரக மந்திரம்.

Friday, September 24, 2010

RAAMAR PIRANTHAAR - AYOTHIYIL

அயோத்தி அயோத்தி என்னு ஒரு ஊரு இருந்துச்சாம்.  அது ஊரு இல்லே.  பெரிய நகரம்.  மாட மாளிகைகள் இருந்த பெரிய நகரம்.  அதை தசரதன் என்று ஒரு சக்கரவர்த்தி ஆண்டு கொண்டு வந்தார்.  அவர் பெரிய வீரர்.  அவருக்கு ஏராளமான மனைவிகள்.  ஆனால் குழந்தைகள் இல்லை.  எனவே அவர் தன்னுடைய குல குருவிடம் ஆலோசனை கேட்டார்.  குலகுரு சொன்னமாதிரி ஒரு யாகம் நடத்தினார்கள். அதிலிருந்து ஒரு கடவுள் வந்து ."தசரதா, மகிழ்ந்தேன்.  இந்தா உனக்கு ஒரு கூஜா நிறைய பாசம்.  இதை உன் மனைவிக்குக் கொடு.  குழந்தைகள் கிடைக்கும்" என்று கூறி மறைந்தது.  இந்தா சந்தற்பதிர்ககத் தான் திருமால் காத்துக் கொண்டிருந்தார்.  அவர் மட்டும் வர முடியுமா?  தேவியை  ஏற்கனவே
அனுப்பி விட்டார்.  இப்போ இவர் வரணும்னா பாம்புப் படுக்கையை என்ன செய்யிறது?  சங்கு சக்கரத்தோடு போக முடியுமா?  அவர்களுக்கும் ஒரு வழி காட்டணும்.  அவர் தான் மாயா நாடகத்தைத் துவக்கினார்.  தசரதனுக்கு ஆயிரக்கணக்கில் மனைவிகள் இருந்தாலும் பட்டத்து இராணிகள் மூன்று பேர் தான்.  அவர்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை.  இங்கே பாருங்கடா  மிதிலையில் பிறந்தால் மைதிலி என்கிறார்கள் - அதுபோல கோசல நாட்டில் பிறந்த பெண் என்பதால் கோசலை, கேகய நாட்டில் பிறந்ததால் கைகேயி.  ஒருவேளை சுமத்திரா தீவில் பிறந்ததால் சுமிதிரையோ என்னவோ தெரியல்லே.  தசரதர் ஒரு பாதியை கோசலைக்கும் இன்னொரு பாதியை கைகேயிக்கும் கொடுத்தார்.  ஏனோ தெரியல்லே சுமுத்திரைக்குக் கொடுக்கல்லே.  விடுவாங்களா இரண்டு பேரும்.  கடவுள் மாயா விளையாட்டு நடக்குது.  இருவரும் தங்கள் தங்கள் பகுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் சுமித்திரைக்குக் கொடுத்தார்கள்.
மூவரும் கருவுற்றார்கள்.  கோசலைக்கு இராமர் பிறந்தார்.  கைகேயுக்கு பரதன் பிறந்தான்.  சுமுத்திரைக்கு இலக்குவனும் சத்ருக்கனனும் பிறந்தார்கள்.  கோசலை கொடுத்ததை உண்டதால் இலக்குவன் பிறந்தான்.  எனவே இராமர் பின்னாலே சுற்றினான்.  கோசலை கொடுத்த பாசத்தால் பிறந்தவன் சத்ருக்கினன்.  எனவே அவன் பரதனோடு சுற்றினான்.  புரிந்ததா குழந்தைகளே?  நாளைக்குப் பாப்போம்.

Thursday, September 23, 2010

SEETHAI MITHILAI VANTHAAL - MYTHILI AANAAL

உடலில் படும் ஊமைக் காயத்தை ஆற்ற வேது கொடுக்கிறோம்
வேது என்றால் தெரியவில்லையா? நாம் தமிழர் ஆயிற்றே? ஆங்கிலத்தில் சொன்னால் தானே புரியும்.  CHEMISTRY - வேதியல் இப்போது புரிகிறதா? உள்ளத்தில் படும் ஊமைக் காயத்தை ஆற்ற இறைவன் பெயரைச் சொல்லிக்கொள்கிறோம்.
இறைவன் பெயர் உள்ளத்துக்கு வேது
இந்த வேதுதான் வேதம்
வேதம் என்னும் தூய தமிழ்ச்சொல்லை ஆரியம் என்பது விந்தை
குழந்தைகளே நான் சொல்லவில்லை இதை.  பொதுவன் அடிகள் என்று ஒரு தமிழில் புலமை வாய்ந்த ஒருவர் சொல்லி இருக்கிறார்.
இதற்கென்றே அவர் ஒரு வலைத் தளம் வைத்து தமிழில் உள்ள சொற்கள் எப்படி நாம் பயன்படுத்தாமல் விட்டதால் வடநாட்டவர் பயன்படுத்தி அவர்கள் மொழியை வளம் ஆக்குகிறார்கள் என்று விளக்குகிறார்.  குழந்தைகளே  இறைவனை - கடவுளை மறக்க வேண்டாம்.  எப்போதும் துதி பாடுங்கள்.  வடமொழியில் சுலோகங்கள் என்று சொல்ல வேண்டாம்.  தமிழில் - தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் இன்னும் எராளமான துதிப் பாடல்கள் உள்ளன.  பாடுங்கள்.  இல்லையா?  இசைத்தட்டுகளில் TMS சீர்காழி கோவிந்தராஜன் போன்றோர் பாடிய அழகிய தமிழ் பாடல்கள் உள்ளன.  பாடுங்கள்.
உதாரணமாக
முருகா ... முருகா ...
அழகென்ற சொல்லுக்கு முருகா (2)
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா
 (
அழகென்ற சொல்லுக்கு முருகா)
சுடராக வந்தவேல் முருகா
கொடும் சூரரை போரிலே வென்றவேல் முருகா (2)
கனிக்காக மனம் நொந்த முருகா (2)
முக்கனியான தமிழ்தந்த செல்வமே முருகா
 (
அழகென்ற ... )
தமிழ் தந்த தெய்வம் முருகன்.  தமிழில் அவனைப் பாடுங்கள்.  மகிழ்ச்சி பொங்கும்.

"சரிங்க தாத்தா.  கதைக்கு வாங்க.  சீதையை கடலிலே விட்டு விட்டார்கள்.  குழந்தை என்ன ஆனது தாத்தா? "  கேட்டால் ஹரிணி.  சரிம்மா இப்போ காட்சி மாறுகிறது.  நாம் மிதிலை என்ற நாட்டுக்குப் போகிறோம்.  சரியா ?  எல்லோரும் தலையை ஆட்டினார்கள்.  மிதிலையிலே ஒரே பஞ்சம்.  வரலாறு காணாத பஞ்சம்.  ராஜா ஜனகன் ஒரு முனிவர் மாதிரி.  அவரை ராஜா ரிஷி என்று கூட சொல்றாங்க.  அவர் ஆண்டவனை வேண்டினார்.  வேள்விகள் நடத்தினார்.
"தாத்தா வேள்வி என்றால் என்ன தாத்தா?"  கேட்டாள் ஐசு.   சூரியா சொன்னான் "வேள்வி என்றால் தமிழில் யாகம் என்று பொருள்.   யாகம் என்பது வடசொல்.  அதனால் தாத்தா வேள்வி என்று நம்மிடம் சொல்கிறார்.  சரிதானே தாத்தா" . ஆமாம் தமிழில் நல்ல சொற்கள் இருக்கும் போது பிற மொழி சொற்களைச் சொல்லக்கூடாது.  இதைத் தான் "கனி இருப்பக் காய் கவர்ந்தற்று" என்று வள்ளுவர் சொல்கிறார்.  பழம் இருக்கிறப்போ கையைப் போய் யாராவது சப்பிடுவங்கள?  சரி.  கதைக்கு வருவோம்.  ஜனகர் பூமியை உழுதார்.  ராஜா என்றாலும் நல்ல முன்மாதிரியாக இருந்து ஏறிப் பூட்டி அவரே நிலத்தை உழுதார்.  மன்னன் எப்படியோ அப்படித் தானே மக்களும்.  எனவே அவர் உழும் தொழிலைத் தானே செய்தார்.  நான் ராஜா.  நான் போய் உழலாமா என்று எல்லாம் அவர் கேக்கல்லே.  ராஜா என்றால் யார் தெரியுமா?  "தெரியும்  தாத்தா, ராஜா என்றால் மன்னன்.  நாட்டை அரசாள்பவன் மன்னன்.  அரசன் என்று கூட சொல்லலாம்." என்றான் சூரியா.  உழுத போது ஏரில் ஒரு பொருள் தட்டியது.  எல்லோரும் ஓடி வந்தார்கள் ஓசையைக் கேட்டு.   அங்கே கண்டார்கள் ஒரு பெட்டியை.    பெட்டிக்குள்ளே ஒரு பொண்ணு.  வைர வைடூரியங்கள் இருந்தன.  அரசன் அந்த பெட்டியை எடுத்தான்.  குழந்தையை எடுத்துக் கொஞ்சினான்.  அந்த குழந்தைக்கு சீதை என்று பெயர் இட்டான்.  மிதிலையில் கிடைத்த குழந்தை என்பதால் மக்கள் மைதிலி என்று செல்லம் கொண்டாடினார்கள். "தாத்தா இலங்கையில் நீரில் விட்ட குழந்தை மிதிலையில் பூமியில் கிடைத்தது எப்படி தாத்தா" நம்ப முடியவில்லையே என்றான் சூரியா.  டேய்,  நான் சொல்றது கடவுள் கதை.  கதை என்றால் இப்படித் தான் இருக்கும்.  திரைப்படத்தில் மாடி விட்டு மாடி தாவுகிறார்கள்.  ஒருத்தன் நூறு பேரை அடிக்கிறான்.  இரசிக்கிறீர்கள்.  ஏற்றுக் கொள்கிறீர்கள்.  கை தட்டுகிறீர்கள்.  வாயொலி எழுப்புகிறீர்கள்.  ஆமாண்டா.  விசில் அடிக்கிறீர்கள்.  அது மாதிரி தான் இதுவும்.  கேள்வி கேட்கக்கூடாது.  தெய்வக் குத்தம் ஆயிடும்.   சரியா?
திருமகளே மிதிலையில் பிறந்த பிறகு செல்வம் கொட்டியது அந்த ஊரில்.  "ஏங்க தாத்தா நம்ம ஊரிலும் வரலாமில்லே அந்த திருமகள்.  இங்கேயும் செல்வம் கொட்டுமில்லே?" என்றால் ஐசு.   அது தான் நீ வந்து இருக்கிறீயே அதுவே போதுமடி என்றார் தாத்தா.  "சரிங்க தாத்தா - சீதை வந்தாச்சு.  இவங்களைக் கட்டிக்க இராமர் வரணுமே?"  . "ஆமாம் வந்து விட்டார்.  நாளைக்குச் சொல்கிறேன்.  சாமி மேலே ஒரு பாட்டு பாடிட்டு எல்லோரும் படுங்க" என்றார் தாத்தா.  நாளைக்கு சொல்றேன் அந்தக் கதையை.